தேவகானம்

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

தேவகானம் .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 120

கவிக்கோ என்றாலே பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது .”அம்மி கொத்த சிற்பி எதற்கு ? ” உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக் கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர். கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் .
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .

உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படைத்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !

சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில் கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .

பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு கவிதை இதோ !

என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ டுப்பது
உனது கடமை அல்லவோ ?

கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்சலிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .

மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .

ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம் அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.

முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும் பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும் பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த னன்என் ஈசனே !

நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .

ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .

மனிதன் தன்னை மீட்கஅம்
மகேசன் தோன்று வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக தைகள் கேட்டனன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான பணியெனப்
புகலு வேஎன் தோழரே !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை .

முந்து வானம் காற்று நீ
மூண்ட நீரும் பூமியும்
உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன
இந்து முஸ்லிம் கிறித்து யூதன்
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும் ஏன் ?
இந்து முஸ்லிம் என்கின்றார் .

எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா உனக்கென
ஈங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்குக்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் !

நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .

நாள்களும் கோள்களும்
நாய கன்கைப் பந்துகள்
நாள்களும் கோள்களும்
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும்
நமை யலைப்ப தில்லையே
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள் வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம் கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால் நிருபித்து உள்ளார் .

Please follow and like us:

You May Also Like

More From Author