சென்னையில் திருக்குடை ஊர்வலம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Estimated read time 0 min read

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்துக்காக சென்னையில் இருந்து கொண்டு செல்லப்படும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தின் முக்கிய நிகழ்வான கவுனி தாண்டுதல் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்தனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் இந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக சென்னை, சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த மேடையில் தொடக்க விழா நடைபெற்றது.

பக்தர்களின் ஆரவாரத்துடன் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம், மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கி தொடங்கி வைத்தார். திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 5:45 மணி அளவில் கவுனி தாண்டியது. இந்நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு மனமுருகி வேண்டினர்.

திருப்பதி திருக்குடையை , திருப்பதி வெங்கடேச பெருமாளின் மறு உருவமாகவே பக்தர்களால் வணங்கப்படுகிறது. திருப்பதி திருக்குடையை தரிசித்து வணங்குபவர்களுக்கு பெருமாளின் ஆசி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. திருக்குடை ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கவுனி தாண்டிய பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக இரவு அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலை சென்றடைகிறது. அங்கு, திருக்குடைகளை வரவேற்று, லஷ்மன் ஸ்ருதியின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து, அக்.3ம் தேதி (நாளை) முதல் சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து அக்.7ம் தேதி திருமலையைச் சென்றடையும். திருக்குடை ஊர்வலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டு தரிசிப்பர். திருக்குடைகள் திருமலையை அடைந்ததும், ஏழுமலையான் கோயில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. திருக்குடைகளை வழிப்பட்டால், நினைத்த காரியம் நிறைவேறும், திருமண தடை அகலும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும். தொழில் செழிக்கும். செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author