உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கங்கை நதியில் உள்ள மாளவியா பாலம் 137 ஆண்டுகள் பழமைவாய்ந்ததை சுட்டிக்காட்டி, அங்கு புதிதாக பாலம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
அந்த வகையில் புதிய பாலத்தின் கீழ் அடுக்கில் 4 ரயில்வே வழித்தடங்களும், மேல் அடுக்கில் ஆறு வழிப்பாதையும் இடம்பெறும் என்று கூறிய அவர், போக்குவரத்தைக் கையாளும் திறனில் சர்வதேச அளவில் இந்தப் புதிய பாலம் அங்கம் வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் தலா 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதன்மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 9 ஆயிரத்து 448 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.