பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Estimated read time 0 min read

பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாக பாலாற்றில் கழிவு நீரை வெளியேற்றும் தோல் பதனிடும் ஆலைகளை மூட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி விரிவான உத்தரவு வழங்கியது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லாதது கவலை அளிக்கிறது என கூறினர்.

பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரவித்த நீதிபதிகள்,

உத்தரவு காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது, முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.

பாலாறு மாசுபடுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது நோக்கம் எனக்கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் முயற்சி செய்யாதவரை எதுவும் நடக்காது என தெரிவித்தனர்.

கழிவுநீர் மாசுவை தடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக தமிழக மாவட்ட ஆட்சியர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author