உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 468-ஆம் ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக சென்றது. பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, என 5 ரதங்களில் கொடிகள் எடுத்து வரப்பட, மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதங்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக நாகூரை வந்து சேர்ந்தது. பின்னர், ஊர்வலம் நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்ததும், தர்காவின் பரம்பரை கலிபா பாத்திஹா ஓதியதை அடுத்து மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. வருகின்ற 11 ஆம் தேதி நாகையில் இருந்து நாகூர் தர்கா வரை சந்தனக்கூடு ஊர்வலமும், மறுநாள் 12 ஆம் தேதி அதிகாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது.
விழாவில் பங்கேற்க தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகூரில் கூடுவார்கள் என்பதால் வரும் 12 ஆம் தேதியன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.