பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரிய பின், மும்பையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் தனது பெயரை ஆளுநரிடம் முன்மொழிந்து, அதற்கான ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்ததாக தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். இதேபோல சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் மகாயுதி கூட்டணிக்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தாம் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்மொழிந்ததை நினைவுகூர்ந்தார். அந்த வகையில், தற்போது பட்னாவீஸ் முதலமைச்சராக தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும், கூட்டணியில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேபோல மகாராஷ்டிராவில் சுமுகமாக ஆட்சி நடைபெற தாம் உறுதியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்தார்.