காலந்தோறும் கண்ணதாசன்

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

காலந்தோறும் கண்ணதாசன் நூல் ஆசிரியர் : திரு.கே.ஜி.இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
புதுகைத் தென்றல் வெளியீடாக புதுகைத் தென்றல் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. கே.ஜி. இராஜேந்திர பாபு வரலாற்று சிறப்பு மிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர். பாரத மாநில வங்கியில் பணிபுரிந்து வருபவர். பட்டிமன்றப் பேச்சாளர், பன்முக ஆற்றலாளர், புதுகைத் தென்றல் இதழில் மாதா மாதம் ஆவலுடன் படித்த கட்டுரை என்றாலும் முழுமையாக நூலைப் படிக்கும் போது கவியரசு கண்ணதாசனின் பிம்பம் உயர்கின்றது. இந்நூலிற்கு தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் முத்திரை பதிக்கும் அணிந்துரை அழகு சேர்க்கின்றது. திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் தனது வாழ்த்துரையில் நூலாசிரியரக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை தருமராசன் அவர்களின் மகிழ்வுரை மனதைத் தொடுகின்றது. கவியரசு கண்ணதாசனின் அரிய புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. கவியரசு கண்ணதாசன் பற்றிய மிகச்சிறந்த ஆவணமாக நூல் உள்ளது.
நூலின் ஆரம்ப வரிகளிலேயே கவியரசு கண்ணதாசனின் பன்முக ஆற்றலை படம் பிடித்துக் காட்டுகின்றார் நூல் ஆசிரியர். கவிஞர், செவியினிக்கப் பேசும் பேச்சாளர், உரைநடை எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, கதாசிரியர், பத்திரிகை ஆசிரியர், படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி என்று பன்முக ஆற்றலோடு பவனி வந்தவர் கவியரசு கண்ணதாசன். ஒவ்வொரு துறை பற்றிய விளக்கம் அருமை.
சகலகலா வல்லவராகத் திகழ்ந்தார் என்பது உண்மை. நேரு பிரான் மறைந்த போது, சாவே, உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா என்று அவர் எழுதிய வரிகள் இரங்கல் கவிதையின் உச்சம். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளது. பாரதிக்கு சிந்து, பாரதிதாசனுக்கு எண்சீர் விருத்தம், கண்ணதாசனுக்கு அறுசீர் விருத்தம் கைவந்தவை, அவரது தென்றல் இதழ், புயலை உருவாக்கியது. மாறும் உலகின் மகத்துவம் அறிவேன், மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல என்று பாடியவர். இப்படி கவியரசு கண்ணதாசனை உள்வாங்கி, உணர்ந்து, ஆய்ந்து, தோய்ந்து கட்டுரை வடித்துள்ளார் நூல் ஆசிரியர்.
கவிஞன் தொலைநோக்கு சிந்தனையாளன். அதனால் கவிஞன் கணிப்பு பொய்ப்பதில்லை என்பது உண்மை.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
கவியரசு கண்ணதாசன் எழுதிய வைர வரிகள் இன்றளவும் அவருக்குப் பொருந்துவதாகவே உள்ளது. நூலாசிரியர் இவ்வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
விருப்பமில்லாத வாழ்க்கை, வீணை கையிலே வெறுப்பு மனத்திலே, அதை விவரிக்கிறார் பாட்டிலே. இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இப்படி கருத்தாழம் மிக்க அற்புத வரிகளை நூலில் மேற்கோள் காட்டிகண்ணதாசன் இன்றும் வாழவதை கட்டுரைகளில் நிலைநிறுத்தி உள்ளார் நூல் ஆசிரியர். காலத்தால் அழியாத கனியினும் இனிய அற்புதமான பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார். இதனைப் படிக்கும் போது இன்றைய பாடல் வரிகள் என் நினைவிற்கு வந்தது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். கண்ணதாசனின் அருமையை இன்றைய பாடல் ஆசிரியர்கள் நமக்கு நன்கு உணர்த்தி வருகின்றனர். கவியரசு கண்ணதாசன் தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சொல் விளையாட்டு நிகழ்த்துவார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நூலில் உள்ளது.
ஒரு நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டினார் கவிஞர். உள் இருந்தபடியே நண்பர் கேட்டார் who is outstanding ., கவிஞர் சொன்னார்.outsatnding poet is outsatnding ஆங்கிலத்திலும் அறிவார்ந்த சொல் விளiயாட்டு. கண்ணதாசன் பாட்டிலேயே பட்டிமன்றம் நடத்தியவர். எடுத்துக்காட்டு. அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன் இப்படி திரைப்பாடல்களில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பாடல் எழுதிய ஆற்றலை வியக்கின்றார் நூல் ஆசிரியர். உழைக்கும் கரங்களின் மகத்துவத்தைத் தனிப்பிறவி படத்தில் பாடுகிறார் கண்ணதாசன்.
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே
பொதுவுடைமை சிந்தனையும், கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு என்று நிரூபிக்கும் பாடல்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.
கவியரசு கண்ணதாசன் கண்ட பொதுவுடைமைக் கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்று நாட்டில் நடப்பது, பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். இந்த நிலை மாற வேண்டும். கவியரசு கண்ணதாசனுக்கு மனிதாபிமானம் மட்டுமல்ல, விலங்காபிமானமும் உண்டு என்பதை உணர்த்தும் பாடல்.
வளர்த்த பிள்ளையும் மாறி விடும்
வாழும் உறவும் ஓடி விடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடு வரைக்கும் கூட வரும்.
கண்ணதாசன் கம்பனைச் சாடிய காலகட்டத்திலேயே, கம்பன் மேல் உயர்வான கருத்தையே வைத்திருந்தார். வார்த்தை தமிழுக்கு வழங்கும் தமிழ்வேந்தன் கம்பன் என்கிறார் கண்ணதாசன்.
பாசம் என்ற படத்திற்கு கம்பன் பாணியிலேயே பாடல் எழுதியுள்ளார் கண்ணதாசன்,
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.
இப்படி கம்ப இராமாயணத்தில் தாக்கத்தை பல பாடல்களில் பயன்படுத்தி உள்ளதை நூலாசிரியர் திறம்பட எடுத்து இயம்புகின்றார்.
பத்திரிக்கைத் துறையிலும் முத்திரை பதித்தவர் கண்ணதாசன். கவியரசு கண்ணதாசன் தேர்ந்தெடுத்து பதிப்பித்த வெண்பாக்கள் நூலில் உள்ளது. சிறப்பாக உள்ளது, ரசனைக்குரிய இலக்கிய வரிகள்.
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
பெண்ணுரிமைக்கும் குரல் கொடுக்கிறார் கவியரசு. சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண் இனத்தை வாழவிட மாட்டாயோ
! காதல் ரசம் சொட்டச் சொட்ட, அதே நேரத்தில பண்பாட்டோடு எழுதுவதில் வல்லவர் கவியரசு.
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே!
ஆலயமணியின் இன்னிசை நீயே!
தாய்மை எனக்கே தந்தவள் நீயே!
தங்கக் கோபுரம் போல வந்தாயே!
தாய்மை எனக்குத் தந்தவள் நீயே என வித்தியாசமாக சிந்திக்கிறார்.
காலந்தோறும் கண்ணதாசன் உண்மை, கால காலத்திற்கு கண்ணதாசன் நிலைப்பது உண்மை, படைப்புகளால் இன்றும் என்றும் வாழ்வார்.
கண்ணதாசன் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூலாக வழங்கி உள்ள நூலாசிரியர் கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு அவர்களுக்கும், இந்த அரிய படைப்பை நூலாக வழங்கிய புதுகை தருமராசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author