அசோகவத்துப் பாஞ்சாலிகள்

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

அசோகவனத்து பாஞ்சாலிகள்!
நூல் ஆசிரியர் : கவிதாயினி மாலதி இராமலிங்கம்v
வெளியீடு : அம்மையப்பர் பதிப்பகம், மனை எண் 106, 6வது குறுக்குத் தெரு, கர்மவீரர் காமராஜர் ஆசிரியர் நகர், ஒட்டம்பாளையம், முதலியார் பேட்டை அஞ்சல், புதுச்சேரி-605 004. பக்கங்கள் : 137 விலை : ரூ. 140 ; கைபேசி : 63692 21462
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

******

அசோகவனத்துச் சீதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அசோகவனத்துப் பாஞ்சாலிகள் இப்போது தான் கேள்விப்படுகிறோம். வித்தியாசமான தலைப்பு. நூலில் அணிந்துரை, வாழ்த்துரை, என்னுரை என 34 பக்கங்கள் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து இருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையை வீழ்த்தி பெண்ணியம் மலர மூன்று வரிகளில் முத்தாய்ப்பாக குறுங்கவிதைகள் ஹைக்கூ வடிவில் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிதாயினி மாலதி இராமலிங்கம். புதுவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவரின் பெண்களின் விழிப்புணர்வு விதைப்பு கவிதைகள் நன்று. நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :

உன்னால் எல்லாம் முடியுமா?
உசுப்பல்களாலேயே பெண்ணின்
உயிர் பிரிக்கும் ஆண்!

பெண்ணை சக மனுசியாக மதித்து அவளது உணர்வுக்கு மதிப்பளித்து அவளது பேச்சுக்கு செவிமடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான ஆண்களுக்கு இருப்பதில்லை. காரணம் பிறந்தது முதல் ஆணாதிக்கச் சிந்தனையுடனேயே வளர்க்கப்படுகின்றனர். பலர், உன்னால் எல்லாம் முடியுமா? என்ற கேள்விகள் கேட்டவர்கள் தான்.

பெண்ணின் தேகத்தையே எரிக்கும்
தீயில்லாமல்
ஆணின் சந்தேகம்!

உண்மை தான். சந்தேகம் என்ற கொடிய எண்ணத்தால் பல குடும்பங்கள் சிதைந்து உள்ளன. தீ இல்லாமல் எரிக்கும் சந்தேகம் கேடு விளைவிக்கும். ஆண்கள் சந்தேக நோயிலிருந்து விடுபட வேண்டும். உற்ற துணையை நம்ப வேண்டும். நம்பிக்கை வேண்டும்.

வேறு அகிலத்திலாவது
வேண்டிய வாழ்வு கிடைக்குமா?
வேதனையின்றி பெண்ணுக்கு!

இந்த உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் வேதனையே மிச்சமென்று வேதனைப்பட்டு உள்ளார். இனியாவது ஆண்கள் ஆணாதிக்கச் சிந்தனைகளை அடியோடு அழித்துவிட்டு மனைவிக்கு மரியாதை தந்து மதிக்கும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

வேற்றுமையிலும் ஒற்றுமை
ஒவ்வொரு குடும்பத்திலும்
ஆண்-பெண் வளர்ப்பு வேறுபாடு!

உண்மை தான். குழந்தையாக வளர்க்கும் போதே சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை. பொட்டப்புள்ளே சிரிக்கக் கூடாது, சிரிச்சாப் போச்சு – இப்படி பல பழமொழிகளை பத்தாம்பசலித்தனமாக சொல்லி வளர்த்து ஆணாதிக்க சிந்தனையை ஆண் குழந்தைக்கும், அடிமைத்தனத்தை பெண் குழந்தைக்கும் மனதில் விதைப்பதை இனியாவது நிறுத்த வேண்டும். ஆண்-பெண் இருவரும் சமம் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

கேள்விக்குறியை
நிமிர்த்தும் ஆச்சரியக்குறி
பெண் எனும் எஃகினம்!

பெண்கள் கேள்விக்குறியாக வளைந்து விடாமல் ஆச்சரியக்குறியாக நிமிர்ந்திட வேண்டும் என்று பெண் இனத்திற்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன. பாராட்டுகள்.

கருத்து சொல்லவே வழியில்லை
கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும்
எங்கு போவார் பெண்?

இன்றைக்கு பல கிராமங்களில் பெண்கள் கருத்து சொல்வதற்கு கூட உரிமை வழங்கப்படவில்லை. வாய் மூடி மௌனியாகவே பல பெண்களின் வாழ்க்கை முடிந்து விடுகின்றன. பேசவே உரிமை இல்லாத போது கொள்கை கோட்பாடு சொல்ல வழி ஏதுமில்லை.

சொற்களினாலே புலப்படாத குழிபறித்துப்
பெண்மையை புதைக்கும்
ஆணாதிக்கம்!

சொற்களினால் விளக்க முடியாத அளவிற்கு ஆணாதிக்கச் சிந்தனை தலைவிரித்து ஆடுவது உண்மை. முற்போக்குவாதிகள் கூட இல்லத்தரசியை பிற்போக்குத்தனமாக நடத்தி வருகின்றனர். பெண் விடுதலை பற்றி மேடையில் பேசிவிட்டு வந்து இல்லத்தரசியை எட்டி உதைக்கும் வாய்ச்சொல் வீரர்கள் மலிந்துள்ள நாடு நம் நாடு.

எரி நெருப்பில்
எறி பெண்ணே
அரிதாரம் கொண்ட ஆணாதிக்கத்தை!

ஆணாதிக்கத்தை பெண் எரி நெருப்பில் எறிய வேண்டாம். ஆண்கள் தங்கள் மனதிலிருந்து ஆணாதிக்கச் சிந்தனையை எறிந்து விட்டால் போதும். சமதர்ம சமத்துவ சந்தோச சமுதாயம் மலர்ந்து விடும்.

ஏன்? எப்படி? எதற்கு?
ஆண் கேட்டால் அறிவியல் அறிவதாக
பெண் கேட்டால் அறிவில்லாத் தனமாக

ஏன்? எதற்கு? எப்படி? என்று பல பெண்களுக்கு கேட்பதற்கு உரிமை வழங்கப்படவில்லை. உரிமைக்காகவே காத்திருக்காமல் நீயே எடுத்துக்கொள் பெண் இனமே. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டுப் பழகு! நியாயம் நீதி கிடைக்கும்.

அடுத்தடுத்த இலக்குகள் கூட்டு
அனைத்தையும் மாற்று
பெண்ணியம் மிளிரப் போற்று!

பிடித்த கவிதைகள் நிறைய மடித்து வைத்தேன். மதிப்புரையில் பிடித்த அனைத்தையும் மேற்கோள் காட்டிட இயலவில்லை. மொத்தத்தில் இந்த நூலை பெண்கள் படித்தால் அடிமைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை கிட்டும். ஆண்கள் படித்தால் ஆணாதிக்க சிந்தனையை மனதிலிருந்து அகற்றி விடுவார்கள். விழிப்புணர்வு விதைக்கும் சிறப்பான கவிதைகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author