Web team
பெருந்தலைவர் காமராஜர் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர்: திரு. ஆர்.முத்துக்குமார்
புரேடிஜி பதிப்பகத்தாரின் பெருமைமிக்க பதிப்பாக வந்து உள்ளது. நூல் ஆசரியர் திரு. முத்துக்குமாரின் பெயரைப் படித்தவுடன் ஈழத் தமிழருக்காக தீ எந்தி உயிர் துறந்த இளைஞன் நினைவிற்கு வந்தார். தமிழர்களின் தாயுமானவரான மதிய உணவு தந்து, மாடு மேய்த்த சிறுவர்களின் கரங்களில் நூல்களைத் தந்து, படிப்பறிவித்த ஏழைப்பங்காளன் வரலாற்றை மிகச் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்.
“பாடப் புத்தங்களில் இருந்து அல்ல, வாழ்க்கையிலிருந்து நேரடியாகப் பாடம் படித்தவர். இந்திய அரசியலில் அவர் ஒரு தனி அத்தியாயம். தென் இந்தியாவின் காந்தி என்று போற்றப்படும் காமராஜரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கை” என்று தொடங்கி, “எந்த மனிதர்களாலும் மிகப் பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை, அனைவரும் படிப்பது அவசியம்” என்று முடிந்த வரை,வரிக்கு வரி சிற்பி சிலை செதுக்குவது போல,தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி, வார்த்தை ஜோடனைகள் இன்றி காமராசரின் வரலாற்;;றை காமராசரைப் போலவே எளிமையாகவும்,இனிமையாகவும் பதிவு செய்துள்ளார்.
கர்ம வீரர் காமராசர் ஜூலை 15ஆம் நாள் 1903 ல் பிறந்தார்.எழுபத்தி இரண்டு வயது வரை ஓய்வின்றி உழைத்தார்.தென்னாட்டு காந்தியாகவே வாழ்ந்த மாமனிதர் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ல் 1975-ஆம் ஆண்டு உடலால் மறைந்தாலும்,தமிழ்நாட்டில் உள்ள படித்த,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின் பதவிகளில் வாழ்கிறார் இன்றும்.
இந்த நூலை இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் படிக்க வேண்டும்.நீதியரசர் கற்பக விநாயகம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சத்திய சோதனை படிக்க வேண்டுமென தீர்ப்பு எழுதியது போல,இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் இந்த நூலை படிக்க வேண்டும் என தீர்ப்பு எழுதினாலும் தவறு இல்லை.
முதல்வராக 1954 ஏப்ரல் 13 அன்று பதவி ஏற்றவுடன் தந்த காரில் வந்த சத்தத்தைக் கேட்டு விட்டு சத்தத்தை உடன் நிறுத்தச் சொன்னார்.சத்தம் போடாம போங்க யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் காமராசர்.இப்படிப்பட்ட ஒரு முதல்வரை நமது தமிழகம் இனி எப்போதும் காணப் போவதில்லை. எளிமையின் சின்னம்,பண்பின் இமயம்,படிக்காத மேதை காமராசர் முதலமைச்சர் ஆனதும்,தனது தாயைக் கூடத் தன்னுடன் சென்னையில் தங்க வைத்துக் கொள்ளாத புனிதர் காமராசர்.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப,தாய் பசித்து இருந்தாலும் பாவச் செயல் புரியாத புண்ணியர் காமராசர்.இது போன்ற பல தகவல்களை நூலில் நன்கு பதிவு செய்துள்ளார். நூல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். காந்தியை சுட்டுக் கொன்ற கூட்டம் காமராசரை கொல்ல முயன்ற தகவலும் உள்ளது.
காமராசர் சின்ன வயதில் தந்தையை இழந்தவர்,வசதி இல்லாததால் படிக்கவும் முடியவில்லை.ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படித்ததாலும், சிந்தித்ததாலும்,தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.
கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார்.இலவசக் கல்வி,இலவச மதிய உணவு என்று காமராசர் கொண்டு வந்த திட்டங்கள் பல லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் தலைவிதியை முன்னேற்றப் பாதை நோக்கி மாற்றியமைத்தன என்பது முற்றிலும் உண்மை.
பல அதிகாரிகள் இன்றைக்கும் காமராசர் மதிய உணவு திட்டத்தால் படித்து வந்தவன் என கண் கலங்கிட நன்றி கூறுவதை நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன்.கல்விக்கண் தந்த வள்ளல் காமராசர்.
கட்சியை வளர்ப்பதற்காக தனது பதவியில் இருந்து தானே விலகி,மற்றவர்களுக்கு வழி காட்டினார்.ஆனால் இன்றைக்கு அரசியல் தலைவர்கள் யாருக்கும் வழி விடாமல் வாழ்நாள் முழுவதும் நிரந்தரத் தலைவர்களாக சுயநலத்தோடு வாழ்ந்து வருவதை பார்க்கின்றோம்.
காந்தியடிகளைச் சொல்வார்கள்,இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே இனி உலகம் நம்ப மறுக்கும்,அதைப் போலத் தான் ஏழைபட பங்காளன் காமராசரையும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனி வரும் உலகம் நம்ப மறுக்கும்.கோடிப்பணங்களுக்கு மட்டுமல்ல,கோடித்துணிக்கு கூட ஆசைப்படாத புனிதர் காமராசர்.மூன்று முறை முதல்வராக இருந்தும் கடைசி நாளில் ஒரு ஆயிரம் கூட பணம் வைத்துக் கொள்ளாத மாமனிதர்.காமராசர் புகழ் பரப்பும் இந்நூலை அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள்.
காமராசருக்கு நான் எழுதிய கவிதை வரி இதோ!
காமராசர் காலம் தமிழகத்தின் பொற்காலம்
காமராசர் காலமானதால் காலமானது பொற்காலம்.