கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புனித நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா நாளை மதியம் 12.20 மணிக்குத் தொடங்கி 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.
விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லாவை பிரதிஷ்டை செய்கிறார். எனவே, பிரான் பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்புச் சடங்குகள், இராமா் கோவிலில் கடந்த சில நாள்களாக கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு புண்ணிய தீா்த்த கட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை கொண்டு கோவில் கருவறை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. பகவான் ஸ்ரீராமரின் பிரதிஷ்டை விழாவிற்கு குறைவான நேரமே இருப்பதால், “ப்ரீ” பிரான் பிரதிஷ்டை சடங்குகளின் கடைசி நாளான இன்று அயோத்தி முழுவதும் ஈடு இணையற்ற பக்திப் பரவச அலையால் எதிரொலிக்கிறது.
மேலும், அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கோவில் முழுவதும் மலர்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நகரெங்கிலும் ஸ்ரீராமர் தொடா்பான கருத்துருவில் கண்கவர் பதாகைகள், அலங்கார வளைவுகள், வில் அம்பு வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் மீது கருணை மழை பொழியும் இராமரின் அருளைத் தேடி நாடு மற்றும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ராமபக்தர்கள் அயோத்தி நகரில் திரண்டிருக்கிறார்கள். கோவில்களில் கீர்த்தனை, பஜனை, இராமாயணம், இராமசரிதமானங்கள் தொடர்ந்து ஓதப்பட்டு வருகின்றன. சாலைகளில் மக்கள் ஸ்ரீராமரின் துதியைப் பாடுகிறார்கள்.
அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, வாகனங்கள் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வான் கண்காணிப்புப் பணிகள் ட்ரோன்களால் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் அயோத்தியின் தெருக்களிலும் சந்திப்புகளிலும் உள்ளனர். சரயூ நதியில் நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸாரும், மீட்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸார் இரவு முழுவதும் கட்டிடங்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை செய்து அயோத்தியின் தெருக்களில் அணிவகுத்துச் செல்கின்றனர். அசாத்திய பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
பிரான் பிரதிஷ்டை விழாவின் இறுதி நாளான இன்று பல்வேறு புனித நதிகள் மற்றும் நீர்நிலைகளில் ராம் லல்லா நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஷியா அதிவாஸ், அகோர் ஹோம் மற்றும் ராத்ரி ஜாக்ரன் மற்றும் வாஸ்து சாந்தி அனுஷ்டானம் போன்ற பிற முக்கிய சடங்குகளும் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று கோவில் வளாகத்தில் 81 கலசங்கள் நிறுவப்பட்டு, இராம் லல்லா விக்ரஹத்தின் ஷர்க்ரா அதிவாஸ் மற்றும் பால் அதிவாஸ் மற்றும் பிற சடங்குகள் செய்யப்பட்டன.
ஜனவரி 23-ம் தேதி முதல் கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், இஸ்கான் உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகள் மற்றும் பல்வேறு கோவில்களின் அறக்கட்டளைகள் சாா்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இராமா் சிலை பிரான் பிரதிஷ்டையையொட்டி, பிரதமா் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் கோவில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஜனவரி 22-ம் தேதி வீடுகள்தோறும் ‘இராம ஜோதி’ (தீபம்) ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.