சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு காத்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1_ஆம் தேதி முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஏற்கனவே தனியாருக்கு விட்டதை நிறுத்தி மாநகராட்சியே நடத்த வேண்டும், தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏற்கனவே தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணிகளை அதன் மூலமே தொடர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். இதனால் அந்த மண்டலங்களில் பொது சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொது சுகாதாரப் பணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க இரவு, பகலாக போராட்டத்தை தொடர்கின்றனர். 12-க்கும் மேற்பட்ட சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு இன்று மூன்று மணி நேரமாக காத்திருக்கிறார். பிற்பகல் ஒரு மணி முதல் ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
ஆனால் அழைப்புவிடுத்தும் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க மாநகராட்சி தயார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.