ஏழைகளின் எதிரியே பாஜகதான்: அரவிந்த் கேஜ்ரிவால்!

Estimated read time 1 min read

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தான் பேசிய 43 நிமிடங்களில் 39 நிமிடங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், டெல்லி மக்களையுமே மிகப் பெரிய அளவில் அவதூறு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி பல விஷயங்களைச் செய்துள்ளது. பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. பாஜக தான் ஏழைகளுக்கு எதிரி. டெல்லியில் உள்ள குடிசைகளை இடித்ததன் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடு இழக்கும்படி அவர்கள் செய்துள்ளனர். டெல்லி பேரவைத் தேர்தலுக்காக பாஜகவுக்கு முதல்வர் முகம் இல்லை, சாதனைகளோ இல்லாததால் அக்கட்சி தான் பேரழிவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லியின் அசோக் விஹாரில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டி எழுப்புவதில் இன்று முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கான்கிரீட் வீடு இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இந்த இலக்கை அடைய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் டெல்லி கணிசமான பங்கை வகிக்கிறது. அதனால்தான் பாஜக-வின் மத்திய அரசு, குடிசைப் பகுதிகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகளைக் கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த வீடுகளின் உரிமையாளர்கள் டெல்லியின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள். மோடி தனக்கென ஒரு வீட்டைக் கட்டியதில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவுகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும்.

நானும் ஒரு கண்ணாடி மாளிகையை கட்டியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு. புதிய வீடுகளை பெறும் பயனாளிகளான நீங்கள் குடிசைவாசிகளை சந்திக்கும் போதெல்லாம், இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் கான்கிரீட் வீடுகள் கிடைக்கும் என்பதை என் சார்பாக உறுதியாக தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லி கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பேரழிவால் சூழப்பட்டுள்ளது. அன்னா ஹசாரேவை முன்வைத்து வந்த சில நேர்மையற்றவர்கள், டெல்லியின் எளிய மக்களை பெரும் பேரழிவுக்குள் தள்ளினார்கள். மதுக்கடைகளில் ஊழல், பள்ளிகளில் ஊழல், ஆள்சேர்ப்பு என்ற பெயரில் ஊழல் என ஊழல் புரிந்தவர்கள் இவர்கள். டெல்லியின் வளர்ச்சியைப் பற்றி இவர்கள் பேசுவார்கள், ஆனால் இவர்கள் டெல்லியின் வளர்ச்சி மீது கடுமையான தாக்குதலை தொடுத்தவர்கள். ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி மக்கள் போர் தொடுத்துள்ளனர். டெல்லி வாக்காளர்கள் டெல்லியை ஆம் ஆத்மி கட்சியின் பிடியில் இருந்து விடுவிப்பதில் உறுதியாக உள்ளனர். ஏனெனில், ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு போல டெல்லியை தாக்கி உள்ளது. இவர்கள் வெளிப்படையாக ஊழலில் ஈடுபட்டு அதை கொண்டாடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author