உலகளாவிய சுகாதார பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியமாக வாழ ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது உண்மை . உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம்.
இதை மனதில் கொண்டுதான் 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக நலவாழ்வு அமைப்பு, 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ ஆகும். அதாவது அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெறுவது ஒருவரின் உரிமை சார்ந்தது என எடுத்துக்காட்டுகிறது.
ஆரோக்கியத்திற்கான பொருளாதாரம் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி குறைந்தபட்சம் 140 நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் ஆரோக்கியத்தை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன.
இன்னும் பல நாடுகள் தங்கள் மக்களுக்கு சுகாதார சேவைகளை அணுகுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த சட்டங்களை நிறைவேற்றவில்லை.
இந்த ஆண்டின் கருப்பொருள் பல விஷயங்களை உள்ளடக்கியது. அனைவருக்கு எல்லா இடங்களிலும் தரமான சுகாதார சேவைகள், கல்வி, பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, சுகாதாரமான வசிப்பிடம், பாதுகாப்பான பணியிடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.