மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில், 154 துளைகள், அதன் எதிரே 127 துளைகள் என, மொத்தம் 281 கசிவு நீர் துளைகள் உள்ளன. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அழுத்தம் காரணமாக கசிவுநீர் துளைகள் வழியே வெளியேறி, சுரங்கம் மூலம் சிறு கால்வாய் வழியே வெளியேறுகிறது.
இந்நிலையில்,கசிவு நீர் துளைகளில் சுண்ணாம்பு படிமங்கள் அதிக அளவு படிந்ததால் துளைகளில் வெளியேறும் நீரின் அளவு குறைந்தது. இதனால், கசிவு நீர் துளைகளை சுத்தம் செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கியது. தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில், இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.