பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திராவிட’ என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை விடியா தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நடத்தி வருவது, தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால், சமூக விரோத செயல்களில் ஈடுபட, ஆளும் தி.மு.க-வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால் லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இதை ஊடகப் பேட்டியில் காவல் துறை அதிகாரியே ஒத்துக்கொள்வது, தமிழகக் காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி உள்ளதையே காட்டுகிறது.
பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியுள்ள தமிழகம், கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொம்மை முதலமைச்சரின் கைகளில் உள்ள காவல் துறை, கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன. விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும், கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது. தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார் பொம்மை முதலமைச்சர்.
அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, இந்த திராவக மாடல் ஆட்சியின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரின் செய்கை கண்டனத்திற்குரியது. இத்தகைய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, கொதிப்படைந்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத பொம்மை முதலமைச்சருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.