ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, ராஜமுந்திரி, மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளது.
இவை அனைத்தும் பறவை காய்ச்சல் காரணமாக இறந்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பண்ணை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோழிகள் விற்பனை தடை செய்யப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க கிறிஸ்டியான்பேட்டை, சைனாகுண்டா, பரதராமி, பகுதிகளில் அமைந்துள்ள மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.