கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை ஊழியர்கள் பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தின்போது மருத்துவமனைகளில் வழக்கமான வெளிநோயாளி பிரிவுகள் எதுவும் செயல்படாது. மேலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் நடத்தப்படாது.
விபத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் மட்டும் பராமரிக்கப்படும் என்று போராட்டத்தை வழிநடத்தும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.