சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள், 30 கிலோ மீட்டர் உயரம் செல்லும் செயற்கைக்கோள் மாதிரியை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பூலாங்குறிச்சியை அடுத்த செவ்வூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பலூன் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் மாதிரியை விண்ணில் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அப்போது, 2 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் மாதிரியை பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணில் செலுத்தினர்.
இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் கருவிகளின் மூலம் காலநிலை மாற்றம், நுண்ணுயிர் பரவல், தட்ப வெப்பநிலை, நோய்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும் என்றும், அதன் முடிவுகள் 10 நாட்களில அறிக்கையாக தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்ப உள்ளதாக மாணவர்கள் கூறினர்.