பிப்ரவரி முதல், “ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிப்பது’’ தொடர்பான விவாதம் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது.
பின்லாந்து செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின்படி, சுமார் 50 விழுக்காட்டு பின்லாந்து மக்கள் இனி அமெரிக்காவை நம்புவதில்லை என தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனின் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதிலளித்தவர்களில் ஏறக்குறைய ஐந்தில் நான்கு பேர் அன்றாட வாழ்க்கையில் அமெரிக்க பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் நீண்டகாலமாக நெருங்கிய கூட்டணி நாடுகளாகத் திகழ்ந்து வருகின்றன. இருப்பினும் தற்போது ஐரோப்பிய மக்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பதில் உறுதியோடு இருப்பது ஏன் என்னும் கேள்வி எழுகின்றது.
இதற்கான பதில், ஐரோப்பியர்களின் இந்த நிலைப்பாடானது, கிரீன்லாந்து குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு, உக்ரேன் நெருக்கடி மற்றும் சுங்க வரி பிரச்சினைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதே ஆகும்.
இறையாண்மை, பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை ஐரோப்பாவின் மிக முக்கியமான மூன்று அடிப்படை நலன்கள் ஆகும். இம்மூன்றும் அமெரிக்காவால் அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் ஐரோப்பிய மக்கள் “அமெரிக்க பொருட்களைப்” புறக்கணிப்பது போல் தோன்றலாம். உண்மையில், ஐரோப்பாவில் அமெரிக்கா உருவாக்கிய “தொந்தரவுகளை” ஐரோப்பியர்கள் புறக்கணித்துள்ளனர் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர்.