உலகின் இரு பெரிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட வர்த்தக உறவின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சீனாவும் அமெரிக்காவும் சுங்க வரிக் கொள்கைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை திங்கள்கிழமை அறிவித்துள்ளன.
அதன்படி, சீனப் பொருட்களின் மீது அமெரிக்கா ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்த 34 சதவீத கூடுதல் வரியில் 24 சதவீதம் 90 நாட்களுக்குத் தள்ளிப்போடுவதாகவும், எஞ்சிய 10 சதவீதத்தை நிலைநிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் நாட்களில் அறிவித்த கூடுதல் வரி நடவடிக்கையை நீக்குவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இதன் எதிரொலியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களின் மீது அறிவித்த 34 சதவீத கூடுதல் வரியில் 24 சதவீதம் 90 நாட்களுக்குத் தள்ளிப்போடுவதாகவும், எஞ்சிய 10 சதவீதத்தை நிலைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
தவிரவும், அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொண்ட வரித் துறை சாராத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சீனா நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றி தொடர்ந்து விவாதிக்கும் வகையில், சீனாவும் அமெரிக்காவும் குறிப்பிட்ட அமைப்புமுறையை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.