234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக..!

Estimated read time 0 min read

சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிகளை இறுதி செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகியுள்ளன.

திமுக கூட்டணி ஏற்கனவே தெளிவாக உள்ளது. அதில் சில புதிய கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது யார் என்று மட்டும்தான் தெரிய வேண்டியுள்ளது. அதிமுக கூட்டணியும் கிட்டத்தட்ட வலுவாகி விட்டது. மிச்சம் மீதி உள்ள கட்சிகளையும் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிடுகிறது. தமிழக வெற்றிக் கழகமும் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிடும் சூழலை நோக்கிப் போயுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுகவின் பிரச்சாரத் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author