குத்தாலம் அடுத்துள்ள கண்டியூர் வடிவுடையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ளது கண்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால், கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயில் கட்டிட வேலைகள், சிற்பம் அமைத்தல் மற்றும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட கோயில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது.
கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, யாகசாலையில் மஹா பூர்ணாகுதி நடைபெற்றது.
பின்னர், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களைச் சிவாச்சாரியார்கள் தலையில் வைத்து கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, மேள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் அடங்கிய கடங்கள் கோபுர கலசங்களை வந்தடைந்தது. பின்னர், பரிவார தெய்வங்களான ஸ்ரீபத்ரகாளி அம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.