17-வது மக்களவையின் ஐந்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, நாடு அசுர வேகத்தில் பெரிய மாற்றங்களை நோக்கி நகர்ந்துள்ளது. அவையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
பல நூற்றாண்டுகளாக மக்கள் காத்திருந்த பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் வலுவான அடித்தளத்தைக் காணக்கூடிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறினார்.
பல தலைமுறைகளாக, மக்கள் ஒரே அரசியலமைப்பைக் கனவு கண்டனர்.ஆனால் இந்த அவை 370 வது பிரிவை நீக்கியது மூலம் அதை சாத்தியமாக்கியது. மேலும் 17வது மக்களவையின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். எம்பிக்கள் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
என்ன நடந்தாலும் உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். இந்த சபையை பாரபட்சமற்ற முறையில் வழிநடத்தினீர்கள், அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். கோபமும் குற்றச்சாட்டுகளும் வந்த நேரங்கள் இருந்தன. ஆனால் நீங்கள் இந்த சூழ்நிலைகளை பொறுமையுடன், புத்திசாலித்தனத்துடன் கையாண்டு நடத்துகிறீர்கள் என பிர்லாவைப் பாராட்டினார்.
முந்தைய காலங்களில் புதிய கட்டிடம் தேவை என்று பேசப்பட்டது. ஆனால் 17வது மக்களவையின் போது சபாநாயகரின் முடிவு இதை நிஜமாக்கியது.சபாநாயகர் பிர்லா தலைமையில் சபையில் சம்பிரதாயபூர்வமாக செங்கோல் பொருத்தப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
17வது லோக்சபா 97 சதவீத உற்பத்தியை கண்டது என்றார். 17வது லோக்சபாவின் முடிவை நோக்கி நகர்ந்து வருகிறோம். 18வது லோக்சபாவில் உற்பத்தித்திறன் 100 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.