தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு வரவில்லை என்றும்,மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜபுவாவில் சுமார் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய அவர், என்னுடைய இந்த வருகை குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.மக்களவைத் தேர்தலுக்கான போராட்டத்தை மோடி தொடங்குகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு வரவில்லை, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன் என தெரிவித்தார்.கடந்த பத்து ஆண்டுகளில் தனது அரசின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார்.இரட்டை இயந்திர அரசு இரட்டை வேகத்தில் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மத்திய பிரதேச மாநில மக்களின் வளர்ச்சிக்காக நாங்கள் இரவு , பகல் பாராமல் உழைத்து வருகிறோம். காங்கிரஸ் ஆட்சி காலம் ஒரு இருண்ட காலம். கொள்ளை அடிப்பதே காங்கிரசின் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டது . மலை வாழ் மக்களின் நலனை நாங்கள் பாதுகாத்தோம். அவர்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். 2024 மக்களவை தேர்தலில் பாஜக 370க்கும் அதிகமான தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக பொதுக்கூட்ட மேடைக்கு மோடி சென்ற போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்து பொதுமக்கள் பூக்களை தூவி அவர்களை வரவேற்றனர்.