செப்டம்பர் 3ஆம் நாள், மனித குலம் நினைவுகூர வேண்டிய மாபெரும் நினைவு நாளாகும். இந்நாளில் சீனா மாபெரும் அணி வகுப்பை நடத்தி, உலகத்துடன் இணைந்து, வரலாற்றை நினைவில் கொண்டு, தியாகிகளை நினைவு கூர்ந்து, அமைதியைப் பேணிமதித்து, ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளது.
இதே நாளில், சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் கோலாகமாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தி, இராணுவ அணி வகுப்பைப் பார்வையிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வில் 61 வெளிநாட்டுத் தலைவர்கள், தொடர்புடைய நாடுகளின் உயர் நிலைப் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், முன்னாள் அரசியல் தலைவர்கள் முதலியோர் பங்கெடுத்து, அமைதி மற்றும் வளர்ச்சி வேண்டி யுகத்தின் வலிமையான முழக்கத்தை வெளியிட்டனர்.
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர், உலகப் பாசிசவாத எதிர்ப்புப் போரின் முக்கியப் பகுதியாகும். இப்போரின் மூலம் சீன தேசம் மாபெரும் தியாகத்துடன், உலக அமைதிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரின் மாபெரும் வரலாற்று முக்கியத்துவத்தை ஷிச்சின்பிங் விளக்கிக் கூறினார். மேலும், வரலாற்றின் சரியான பாதை, மனித குலத்தின் நாகரிக முன்னேற்றப் பாதை, அமைதியான வளர்ச்சிப் பாதை ஆகியவற்றில் சீனா நடைபோட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் பல்வேறு நாட்டு மக்களுடன் இணைந்து, மனித குலத்தின் பொதுச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்கச் சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.