ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து இரு அணைகளும் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. இதனால் கபினி , கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு போக 53 ஆயிரம் கன அடி நீருக்கும் மேல் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர், நேற்று காலை வினாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்தது. அதன்பின்னர் மேலும் கொஞ்சம் கொஞ்சமா நீர் வரத்து அதிகரித்த நிலையில் நேற்று (ஜூன்26) மாலை நீர்வரத்து 50,000 கன அடியாக இருந்த நிலையில் , இன்று காலை அது 57 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் மெயின் அருவி, சிறிய அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.