திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியான பழங்குடி கிராமத்தில் உள்ள புலியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. 23 வயதான இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பின்னர் சட்டப்படிப்பை படித்தார்.
படிப்பு ஒரு பக்கம் சென்றாலும், வீட்டில் மகளுக்கு வரன் பார்த்தனர். திருமணத்தையும் முடித்த அவர், படிப்பை கைவிடாமல் தொடர்ந்து படித்து முடித்தார்.
பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து தீவிரமாக பயிற்சியும் எடுத்தார்.
இடையில் கர்ப்பம் ஆனதால், தேர்வு நாளில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொன்னதால் தனது கனவு, லட்சியம் தகர்ந்துவிடுமோ என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தேர்வு நடைபெறும் 2 நாள் முன்னரே குழந்தை பிறந்தது.
இதனால் தேர்வு எழுதுவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்த போது, உன்னால் முடியும் என ஸ்ரீபதியின் கணவர் வெங்கட்ராமன், ஒரு லட்சம் செலவு செய்து சாதாரண காரை சொகுசு காராக மாற்றி தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றார்.
தேர்வையும் விடாமுயற்சியுடன் எழுதிய ஸ்ரீபதி அதில் வெற்றியும் கண்டார். பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தொடர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பழங்குடியின மக்கள், யாருக்குத் தங்களின் வலி தெரியுமோ, உணர முடியுமோ, புரிந்து கொள்வார்களோ அவர்களே அந்த இடத்திற்குச் சென்றிருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.