அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசிவருகிறது.
வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றது. இதனால், நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்ற முக்கிய நகரங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
இந்த குளிர்கால பனிப்புயல் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வாகனங்களின் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், சாலைகளையும், ரயில் வழித்தடங்களையும் மலைபோல் பனி சூழ்ந்துள்ளது.
பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளை பனி சூழ்ந்துள்ளதால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.