நாட்டிலேயே நம் மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி இருக்கின்றது என்றும், மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மருத்துவர் தின விழா- ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை செய்த மூத்த பல்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உங்களைப் பெருமைப்படுத்தியதால் ராஜ்பவன் பெருமை அடைகிறது. சில ஆண்டுகளுக்கு முன், வரலாற்றில் இல்லாத வகையில் மக்கள் வீடுகளைலேயே முடக்கியது கொரோனா பெருந்தொற்று. அப்போது அவர்களை பாதுகாத்தது மருத்துவர்கள் தான். அவர்களை உயிரை பணயம் வைத்து பணி செய்தனர். நூற்றுக்கணக்கானோர் தங்களது இன்னுயிரை மக்கள் சேவையில் இழந்தனர். மறக்கமுடியாத மிகப்பெரிய சேவையை இந்நாட்டு செய்தனர்.
நாட்டில் எந்தவொரு மருத்துவரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டேன், மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என யாரும் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீட்டில் இருக்கவில்லை. கார்கில் போரை விட அதிகமான மருத்துவர்கள் கொரோனாவில் இறந்தனர். மிகச்சிறந்த சேவை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவிக்கிறேன். மருத்துவர் என்ற நீங்கள் வெறும் தனிப்பட்ட நபரோ, தனிப்பட்ட வாழ்க்கையோ அல்ல. நீங்கள் நாட்டின் சொத்துகள். அது இந்த சமூகத்திற்கானது.
மருத்துவர்களை பண்புடன் மதிக்க வேண்டும். இந்த சமூகம் ஆசிரியர்கள், குரு மற்றும் மருத்துவர்களை மதிக்கும். அவர்களின் வார்த்தைக்கு மறுவார்த்தை இருக்காது. ஆனால், தற்போது முதலாளித்துவ பொருளாதாரமாக உள்ளது. நான் சேவை செய்கிறேன், அதற்கு எனக்கு பணம் கிடைக்கின்றது, என பணப் பரிமாற்றமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நீங்கள் செய்வது வெறும் பணி அல்ல, கடவுளுக்கு சேவை செய்வது போல. நமது பள்ளிகளில் மருத்துவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை பள்ளி பாடத்தில் இணைக்கப்பட வேண்டும், சமூகத்தில் அவை விதைக்கப்பட வேண்டும்.
நமது மாநிலம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நம்மிடம் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், அவர்களுக்கு இங்கு கிடைப்பது சரியான சிகிச்சை மட்டுமல்ல, வெறும் பொருளாதாரமாக மட்டுமல்லாமல் தொழில் தர்மத்துடன் இங்கு சிகிச்சை கிடைக்கும் என அவர்களுக்கு தெரியும்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை அளிப்பதாக கூறும்போது, நீங்கள் அளிக்கும் சேவை ஒப்பிட முடியாதது. அது மிகச் சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த மக்களுக்கு சிகிச்சை மட்டும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு படிப்பினையை கற்றுக் கொடுக்கிறீர்கள். நம் வாழ்க்கை முறையை மாற்றியதால் வரக்கூடிய நோய்கள் தான் இங்கு அதிகம். எங்கு சென்றாலும் 100 வருடம் வாழுங்கள் என வாழ்த்துவார்கள்.
நாகலாந்தில் நான் பணிபுரிந்தேன். அங்கு கிராமங்கள் அதிகம் 100 வயதுக்கும் கடந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள். பலருக்கு தலைநகருக்கு வருவதற்கு வசதி இருக்காது, அவர்களை நேரில் சந்தித்த அவர்களை கௌரவித்திருக்கிறேன். அவர்களுக்கு ஜங்க் ஃபுட் தெரியாது. சரியான உணவு முறை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உணவுகளை உண்ண வேண்டுமென பகவத் கீதையும் சொல்லியுள்ளது.
அதிகமாக சாப்பிடக் கூடாது, துரித உணவுகளை தவிர்த்து, முறையான ஓய்வு முறையான உடற்பயிற்சி இதை மட்டும் பின் தொடர்ந்தால் நோயிலிருந்து விலகி இருக்கலாம். பள்ளி மாணவர்களிடையே நலமுடன் வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் இந்த அறிவுரையை தவிர்ப்பார்கள், ஆனால் பெற்றோர்கள் அதை தவிர்க்க மாட்டார்கள்.
நம் நாட்டிற்கு சுகாதாரமான நலமுடன் குடிமக்கள் தேவைப்படுகின்றார்கள். நாம் பல வாய்ப்புகளை இழந்துள்ளோம், நாம் சுதந்திரம் அடையும்போது ஆறாவது பொருளாதர நாடாக இருந்தோம். ஆனால் அதன்பின் 11வது நாடாக இருந்து இப்போது 5வது பொருளாதார நாடாக இருந்தோம். விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும், அப்போது நலமான மக்கள் தேவை ” என்று கூறினார்.