திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும், மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும்.
மாசித் திருவிழா இன்று புதன்கிழமை கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், 4.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.
10-ம் திருநாளான பிப்ரவரி 23 -ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் திருத்தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிப்பர். பிப்ரவரி 24 -ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், மறுநாள் 12-ம் திருநாளுடன் விழா நிறைவு பெறுகின்றது.