Web team
முழு உயரக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவாறே நெற்றிப் பொட்டை சரி செய்தாள் அவ்வை. முன் நெற்றியில் எட்டிப் பார்த்த நரை முடிகளுக்கு சாயம் பூச வேண்டும் என்று நினைத்த நொடியே…முரண்நகையோ? என்று லேசான புன்னகை இதழில் தொற்றியது.
அன்றைய அவ்வை பாணர்குலத்துப் பைங்கிளி..கரிய கூந்தல் நீங்க கணபதியைக் கை தொழுதாள்…இன்றைய அவ்வை இளமையை தக்க வைக்க இரசாயனம் தேட வேண்டியுள்ளது. கிராமம் கடக்கும் தொடர்வண்டியாய் சிந்தனை வளர்ந்தது.
முனைவர்.அவ்வை, சிறந்த தமிழ்த்துறை பேராசிரியை என்ற தங்கநிற கேடயம் அலமாரியின் மேல் தட்டில் இருந்து பெருமை பேசியது.
“அற்றைத் திங்கள் வெண்ணிலவில்” கபிலரையும் பாரி மகளிரையும் அவ்வையையும் ஒரு முக்கோணப் புள்ளியில் மூளை இணைத்து பல பின்னல்களை உருவாக்கின.
அப்பா – நான்காவது புள்ளியாக இணைந்தார்.
அப்பா….உங்களுக்கு பாரியின் மேல் பாசமா? கபிலரின் மேல் காதலா? அவ்வையின் அடிமையா ?தேன்தமிழ் குடத்து வண்டா?
உங்களை தமிழோடு பிணைத்த சங்கிலித் தொடர்களா இவை மூன்றும்?
கல்லூரி செல்லும் வழியெங்கும் இன்று தமிழும் தகப்பனுமாய் தழும்புகின்றனரே …
அன்றாடம் பவுர்ணமியாய், அள்ளித் தந்த வெளிச்சமாய் “அற்றைத் திங்கள்..” என்ற இரு சொற்களில் அத்தனை வாழ்வியல் விழுமியங்களையும் அடக்கிச் சொல்ல முடிந்தது உங்கள் திறனா? தமிழின் வளமா?
அற்றைத் திங்கள் ..இவ்விரு சொற்கள் …சொல்லும் உணர்வுகள் எத்தனை எத்தனை?
நிலையாமை கூறுகிறது.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை
நட்பு, துரோகம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
“ அப்பா, ஏம்பா எனக்கு அவ்வை ன்னு பேர் வச்சீங்க? எல்லோரும் என்னை பாட்டி பாட்டின்னு ஸ்கூல்ல கிண்டல் பண்றாங்க தெரியுமா? “ கண்ணை கசக்கி, கையை காலை உதறி அழத் தொடங்கும் போது…..
கதை சொல்லி.. மடை மாற்ற வேண்டும் என்று தெரிந்த மாயவித்தைக்காரன் நீ…
மடியில் இருத்தி மலை, காடு,அருவி…வெள்ளம்..மலர்…மணம் …முல்லை..தேர் என வந்து நிறுத்தி… தொலைக்காட்சி இல்லாமலேயே ஐம்புலனுக்கும் விருந்து தந்தாய்.
முல்லையோடு பாரி வந்தான்…கபிலர் கை பிடித்து அங்கவை, சங்கவை…உடன் அந்தி வானம்..அழகு நிலா..அனைத்தும் உலா வர அதனூடே உன்னோடு நான்…என்னவொரு வர்ணஜால நாட்கள்..அவை..
அவ்வையும் வந்தாள் ..கதையில்…அவளே நானென அணுஅணுவாய் உணரச் செய்தாய்.
அவ்வைப் பாடல்கள் அன்றாட கதை நேரமாக…காலைநேரம் கடந்து ..மாலை உன் மடி மீது கதை நேரத்திற்கான காத்திருப்பு ..காலவெளி எல்லாம் கடந்த நிலை.
அவ்வையோடு அங்கவை, சங்கவை இற்றைத் திங்களில் ..இகழ்ந்து பட்டு இயலாமையில் ஈரக்கண்களானது அவர்களுக்கு மட்டுமா?
அன்று இரவு …அழகான பவுர்ணமி வெளிச்சத்தில் மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்ற சாப்பாட்டை யார் தான் சாப்பிட்டோம்?
கண்ணீர்..சொரிந்த கார்மேகத்துடன் கை கோர்த்து ….அவ்வையோடு அச்சிறுமியரை கலைந்த மேகங்களுக்கிடையே தேடித் திரிந்தோமே…
அந்த வெட்டவெளியில் மொட்டைமாடியில் …நீ பேசிய அத்தனை வார்த்தைகளும் ஏதோ ஒரு சத்தியம் கேட்பது போல…ஒரு வரம் கேட்டது போலவும் வரம் தருவது போலவும்…மேக மூட்டத்திலிருந்து கசிந்த மெல்லிய நிலவொளியில் முன்பே வாழ்ந்த ஒரு நேரத்து மாயத்தோற்றமாய் ஒரு தேஜாவு போல்.. உணர்ந்தேன்.
அதிகம் பேசாத அம்மா..எப்போதும் நமக்கிடையே நடக்கும் உரையாடல்களை ஒரு துளிகூட சிந்தாமல் சேகரித்து விடவேண்டும் என்பதில் தீவீரமானவள் போல மெல்லிய மூச்சோடு இருப்பாள். அன்றும் அப்படியே அமைதிக்கு மிக அருகில் இருந்தாள்.
“ அம்மா அவ்வை….நீ நல்லா…படிச்சு..உனக்குன்னு ஒரு நிலையான வேலைக்கு போயிரணும்மா….எங்க காலத்துக்குப் பின்னாடி நம்ம …பாரி மக்கள் மாதிரி பரிதவிச்சுற கூடாது…” குரல் தழுதழுத்தது.
“ உனக்கு மூணு பிள்ளைங்க பிறக்கணும்மா…ஒரு பாரியும்..அவன் கூட அங்கவையும் சங்கவையும் கூட பிறக்கணும்மா..”
“ அற்றைத் திங்கள் அங்கவை சங்கவை மாதிரி இற்றைத் திங்கள் பாரி மகளிர் பாரியை பாதி வழியில் தொலைச்சுட்டு பாட்டு பாடி அழுது திரியக் கூடாதும்மா..பாரி கூடவே வளரணும்..வாழணும்..உடன்பிறப்பா இருக்கணும்…
.பாரியும் …அவன் மகள்கள் நல்லா வாழ்றதை கண்ணாற பார்க்கணும்மா “ .என்றாய் கண்களை துடைத்துக் கொண்டே….
அப்பா…நீ யாருப்பா…நான் ..நினைச்சேன் ..உன் பெயர் மட்டும் தான் கபிலன்னு ..என்று கலங்கிய கண்களுடன் கையடக்கத் தொலைபேசி திரையில் தெரிந்த மூன்று பிள்ளைகளின் முகங்களை கூர்ந்து நோக்கினாள் சிறந்த தமிழ்பேராசிரியை விருது பெற்ற முனைவர். அவ்வை.
இன்று பவுர்ணமி என்று மின்னல் போல் தோன்றியது. ஆம் இந்த கதையை எழுதிக் கொண்டிருக்கும் இன்றும் ஒரு பவுர்ணமி நாள்……இன்று சித்ரா பவுர்ணமி..
#ராஜி_வாஞ்சி
ஹூஸ்டன்,டெக்சாஸ்
அமெரிக்கா