முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22, 23ம் தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்ல இருக்கிறார்.
ஜூலை 22 மற்றும் 23 ஆகிய 2 நாள் பயணமாக செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு , அரசு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
இதற்காக ஜூலை 22ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் , அங்கிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். திருப்பூர் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைப்பதோடி, கோவில்வழி புதிய பேருந்துநிலையத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, முன்னாள் முதலமைச்சர்கள் காமராசர் மற்றும் கருணாநிதியின் சிலைகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் ஜூலை 23ம் தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த பயணத்தின் போது முதலமைச்சர் ரோடு ஷோ செல்லவும், பொதுமக்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜூலை 23ம் தேதி மாலை சென்னைக்கு திரும்புகிறார். முதல்வரின் வருகையையொட்டி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.