3I அட்லஸ் வால் நட்சத்திரம் பற்றிய மர்மங்கள் விலகாத நிலையில், பெரிய பேருந்து அளவிலான இரண்டு சிறுகோள்கள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது. அவை பூமியை தாக்க வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அள்ள அள்ளக் குறையாக ஆச்சர்யங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ள விண்வெளியிலும், பிற கோள்களிலும் ஏலியன்கள் உள்ளனவா என்பதை அறிய விஞ்ஞானிகள் டெலஸ்கோப்பை திருகிக் கொண்டிருக்கின்றனர். அப்படி பார்த்துக் கொண்டிருந்த நாசாவுக்கு அண்மையில் பயத்தை காட்டியிருக்கிறது வால் நட்சத்திரம் ஒன்று. 3I ATLAS எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வால் நட்சத்திரம், உண்மையில் வால் நட்சத்திரமா அல்லது நவீன என்ஜின் பொருத்தப்பட்ட ஏலியன்களின் விண்கலமா என்பதில் குழம்பி போயுள்ளது நாசா. காரணம், முதலில் பழுப்பு நிறத்தில் இருந்த வால் நட்த்திரம், சூரிய கிரகணத்தின்போது பச்சை நிறத்திலும், ஹப்பிள் தொலைநோக்கியில் பார்க்கையில் நீலநிறத்திலும் காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி சூரியனை நெருங்கும் வால்நட்சத்திரங்கள், சூரிய காற்றில் அதன் வால் பகுதி சூரியனுக்கு எதிர் திசையில் இருப்பது வழக்கம்… ஆனால் 3I ATLAS வால் நட்சத்திரமோ சூரியனை நோக்கிய திசையில் இருப்பது விஞ்ஞானிகளைக் கிறுக்குபிடிக்க வைத்துள்ளது. இந்த ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பூமியை நோக்கிப் பெரிய பேருந்து அளவிலான இரண்டு சிறு கோள்கள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றின் நகர்வுகளை நாசா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சிறுகோள்கள் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானபோது, எஞ்சிய பொருட்களில் இருந்து உருவான பாறைகள்தான் அவை… 2025 VPI என்று அழைக்கப்படும் முதல் சிறுகோளானது, 37 அடி விட்டம் கொண்டதாக உள்ளது. பூமியில் இருந்து 3 லட்சத்து 61 ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் இந்தக் கோள், பூமியை நோக்கி மணிக்கு 18 ஆயிரத்து 300 மைல்களுக்கும் மேலான வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
மற்றொன்று, 2025 VC4 என்ற சிறுகோள், இது பூமியில் இருந்து 1.24 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும் என்றும் நாசா கணித்துள்ளது. நியூஸ் வீக்கின் படி, பூமியைக் கடந்து பயணிக்கும் பல சிறுகோள்களை நாசா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு கிட்டத்தட்ட ஒரு பஸ் அளவுள்ள விண்வெளிப் பாறைகள்… அவை அதிக வேகத்தில் நகரும் அதே வேளையில், அவற்றால் நமது கிரகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று நாசா கூறுகிறது.
சிறுகோள்கள் என்றால் என்ன, நாசா ஏன் அவற்றைக் கண்காணித்து வருகிறது? சூரிய குடும்பம் உருவானதிலிருந்து சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எஞ்சியுள்ள பாறை நிறைகள் சேர்ந்ததுதான் சிறுகோள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன…அவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுவட்ட பாதைகளுக்கு இடையில் சூரியனைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் குவிந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் சிறுகோள்கள்… அவை சூரியனில் இருந்து 120 மில்லியன் மைல்களுக்குள் இருக்கின்றன… பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து 4.6 மில்லியன் மைல்களுக்குள் வரக்கூடும் என்றாலும், பூமியுடன் மோத வாய்ப்பில்லை என்று நாசா கூறுகிறது.
