இதெல்லாம் ஒரு புத்தகமா?

இதெல்லாம் ஒரு புத்தகமா ?

நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 .

kavignareagalaivan@gmail.com
அலைபேசி 9842974697.

*****

இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது.

“இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார்.

இனிய நண்பர் கவிஞர் நம்பிக்கை வாசல் ஆசிரியர் ஏகலைவனின் வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உள் அச்சு புகைப்படங்கள் யாவும் மிக நன்று.

நூலாசிரியர் என்னுரையில் தாத்தா தண்டபாணி என்று வைத்த பெயரை தணிஜோ என்று மாற்றி புனைப் பெயராக மாற்றி கொண்ட விபரம் எழுதி உள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்ளும் தமிங்கிலம் பாணியில் எழுதி நூலாக்கி உள்ளார். நூலை படித்து விட்டு யாரும் இதெல்லாம் ஒரு புத்தகமா! என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக இவரே தலைப்பு எழுதி எதிர்பார்ப்பைக் குறைத்து உள்ளார்.

சக தோழனுக்கு அறிவுரை சொல்வது போல உள்ள கவிதை

வேணாம் மச்சி!
அவ உன்னை பார்க்கல
அவனை பார்க்குறா வேணாம் மச்சி!

பேச்சு மொழியை அப்படியே கவிதையாக எழுதி உள்ளார். இந்த நூல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர்கள் மொழியில் இருப்பதால்.

காதல் தோல்வியினால் இளைஞர்கள் புகைப்பிடித்து காசை கரியாக்குகின்றனர் என்பதை உணர்த்திடும் கவிதை.

மேட்ச் பாக்ஸ்

அவ வேணாம்னு சொல்லிட்டா
அந்த லட்டரெல்லாம் வேணாம்
மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்

(தயவு செய்து தீப்பெட்டி தருக) என்று தமிழ்ச்சொல்லால் எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

கணினி பொறியாளர்கள் சிறு வாய்கணக்கில் பிழை விடுவதை பார்த்து இருக்கிறோம். அதனை உணர்த்தும் கவிதை.

எங்க கிட்டயே வா!
கம்ப்யூட்டரையே கரைச்சு குடிப்போம்
கணக்கு மட்டும் தப்பாம்!

காதலனுக்கு, காதலி தன் அம்மாவை அத்தை என்று அழைப்பதை கேட்பதற்கு ஆசைப்படுவான். அந்த இயல்பைச் சொல்லும் கவிதை.

நீ என் ஆளு!
என் அம்மாவை அத்தை-னு கூப்பிட்டா
அது போதும் நீ தான் என் ஆளு!

காதல் மயக்கத்தில் கடமை மறந்து திரியும் சக நண்பனை எச்சரிப்பது போல உள்ள கவிதை நன்று.

சொன்னா கேளு!

சொர்க்கம், நரகம், நிலா, பலா, ரோஜா,
முள்ளு-னு எதையும் வளர்த்துக்காதே
அவ வேணாம் சொன்னா கேளு!

இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். ஏதாவது காரணம் தேடி, அதைச் சொல்லி, அடிக்கடி குடித்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். குடி மனநிலையில் உள்ள நண்பர்களின் உளறல் போன்ற கவிதை எள்ளல் சுவையுடன் உள்ளது. குடிப்பதற்காக பொய் பேசும் அவலம் சுட்டும் கவிதை.

அவன் வர்ரான்

அவன் ஆளு பரவாயில்லைனு சொல்லு
சைடிஸ் ரெடியாகும்.
அப்ப சரக்குக்கு?
அவளை ஆன்ந்த் கூட பார்த்தேன்னு சொல்லு.

காதல் வயப்பட்டவர்களுக்கு தனியாகப் பேசும் அனுபவம் உண்டு. அதனை காட்சிப்படுத்தும் புதுக்கவிதை.

ச்.சே ..
நல்லதாண்டா இருந்தான்
தனியா பேசிட்டு இருக்கான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் காதல் வரும் என்பார்கள். இவர், புரிந்ததால் காதல் முறிந்தது என்கிறார்.

ஏண்டா?

அவளை நல்ல புரிஞசிகிட்ட
அப்புறம் ஏண்டா மச்சி
அவ உன்னை வேணாங்கிறா!
…….அதனாலதாண்டா!

பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் கவனமாக படிப்பதில்லை. அவர்களைப்பற்றிய புதுக்கவிதை.

விடு மச்சி!
எனக்கு படிப்பே வரலை!
விடு மச்சி!
யாராவது படிச்சிட்டு போகட்டும்!

காதல் தோல்விக்கு வருந்த வேண்டாம். தோற்றாலும் அது வெற்றி தான் என்று ஆறுதல் தரும் விதமான புதுக்கவிதை.

தோல்வி !

முயன்றவற்றில் எல்லாம் தோற்றால் தோல்வியே !
காதலில் மட்டும் தோற்றால் வெற்றியே !

நூலாசிரியர் கவிஞர் சி. தணி ஜோ என்ற தணடபாணிக்கு பாராட்டுக்கள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author