புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இடையிலான 20 நிமிட தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாஜகவின் ‘இரட்டை இலக்க’ தொகுதி கோரிக்கைக்கு முதல்வர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இந்த உடன்பாட்டின்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் அதிமுக மற்றும் லட்சிய ஜனநாய கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொகுதிப் பங்கீடு புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் ஒற்றை இலக்க தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை தனது செல்வாக்கை நிரூபிக்க கூடுதல் இடங்களை அமித் ஷாவின் நேரடி தலையீட்டின் மூலம் உறுதி செய்துள்ளது.
அதேசமயம், கூட்டணிக்குள் அதிமுகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும் என முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலம், தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
