சென்னை : நாகலாந்து ஆளுநரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கடந்த ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இல. கணேசன் 1980களில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார். தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக 2001 முதல் 2003 வரை பணியாற்றினார்.
மணிப்பூர் ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார் இல.கணேசன். 2023 பிப்ரவரி மாதம் முதல் நாகலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார் இல.கணேசன். பாஜக மூத்த தலைவராக இருந்த இல. கணேசன், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னர் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.