குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் கடந்த ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (ஆக.20) அவர் வேட்புமணு தாக்கல் செய்ய உள்ளார்.
இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேற்று மாலை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று ( ஆக.19) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்றது. வேட்பாளரைத் தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஆக.21) முடிவடையவுள்ள நிலையில், இன்றே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, குடியரசு துணைத்தலைவர் தேர்தல் எதிர்கட்சி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது இந்தியா கூட்டணி.. டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். சுதர்சன் ரெட்டி ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கௌகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.