இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.
குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு கடைசி நாளில் அனலாக பவுலிங் செய்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அந்தத் தொடரில் இரு அணிகளை சேர்ந்த எந்த வேகப்பந்து வீச்சாளராலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக முழுமையாக 5 போட்டிகளில் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத போட்டிகளில் அபாரமாக விளையாடிய அவர் இந்தியாவை தாங்கிப் பிடித்தார்.
விராட் கோலியிடம் கற்ற சிராஜ்:
இந்நிலையில் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆக்ரோஷம் அவசியம் என்று முகமது சிராஜ் கூறியுள்ளார். அதை விராட் கோலியிடம் கற்றுக் கொண்டது இங்கிலாந்து தொடரில் அசத்துவதற்கு உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலியிடம் நான் முக்கியமாக கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில் விளையாட்டில் சண்டையிடம் அணுகுமுறை”
“களத்திற்கு வெளியே விராட் கோலி மிகவும் நன்றாக பேசுவார். ஆனால் களத்தில் விராட் கோலிக்கு எதிரணி எதிரி. அவரிடம் இந்த விஷயத்தை நான் விரும்புகிறேன். என்னுடைய சிறந்த பவுலிங் ஆக்ரோஷத்தில் வருகிறது. அதை களத்தில் காட்டாவிட்டால் என்னால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியாது. விராட் கோலியுடன் ஆர்சிபி அணியில் இருந்ததால் அவருடன் நல்ல பிணைப்பு ஏற்பட்டது”
ரசிகர்கள் சப்போர்ட்:
“களத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோசத்துடன் இருக்க வேண்டும். விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களை விட அதிக ஆக்ரோசத்தைக் கொண்டவர். ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ப்ரூக் – ரூட் பார்ட்னர்ஷிப் அமைத்த போது எங்களுடைய கை கீழே வந்தது. அப்போது நான் அனைவரையும் உத்வேகப்படுத்தினேன்”
“ரூட் விக்கெட் விழுந்ததால் கிடைத்த உத்வேகத்துடன் நாங்கள் போட்டியில் கையை மேலோக்கிச் சென்றோம். மேலும் ரசிகர்களிடமிருந்து ஆதரவை பெறுவதையும் நான் விராட் கோலியிடம் கற்றுக் கொண்டேன். மைதானத்தில் இருக்கும் ரசிகர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவது ஒரு பவுலரிடம் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது ஒரு பவுலருக்கு பறப்பதற்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கும்” என்று தெரிவித்தார்