அமெரிக்காவின் 25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 % வரி விதிப்பால் ஜவுளி ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வரி விதிப்பால் ஆயத்த ஆடைகள் துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை 3 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் இறக்குமதி வரியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட ரூ.3000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 50% சதவீதமாக உயர்த்தியது. தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங்குவதுடன், கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.