குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று (செப்டம்பர் 2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசு தலைவர், நாளை (செப்டம்பர் 3) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார். அவரை ஆட்சியர் வே.சரவணன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலையில் நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர், திருவாரூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றங்கரை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அதேநேரத்தில், மாலை 6 மணிக்கு முன்னதாக தரிசனம் முடிந்தால், ஹெலிகாப்டர் மூலமே அவர் திருச்சி விமான நிலையம் செல்வார் என்றும் கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோயில் மற்றும் அவர் காரில் செல்லும் சாலை வழித்தடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 02.09.2025 முதல் 03.09.2025 அன்று நள்ளிரவு 12 மணிவரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே 02.09.2025 முதல் 03.09.2025 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் ஏறி, இறங்கும் ஒத்திகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தீயனைப்புத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் என அப்பகுதியில் முகாமிட்டதால் ஸ்ரீரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது.