குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
பெரும்பான்மைக்கு 385 வாக்குகள் தேவையான நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.
இதனையடுத்து சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிதாகத் தேர்வாகியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (12ஆம் தேதி) காலை பதவி ஏற்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.