வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளை (Cheque) ஒரு மணி நேரத்தில் பரிசீலித்து, பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை நாளை (அக். 4) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. புதிய முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காசோலை டெபாசிட் செய்தால், அது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு, 1 மணி நேரத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு பணம் அவர்களது வங்கி கணக்கில் வைபாக அனுப்பப்படும்.
இந்த புதிய முறை செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைக்காக, நாடுமுழுவதும் உள்ள வங்கிகள் இன்று (அக். 3) சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய நடைமுறைப்படி, காலை 11 மணி முதல், வங்கிகள் இடையே பண பரிமாற்றம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை நடைபெறும்.
மாலை 7 மணிக்குள், வங்கிகள் தங்களிடம் உள்ள அனைத்து காசோலைகளையும் பரிசீலிக்க வேண்டும். இந்த நேரத்தை தவறவிட்டால், அந்த காசோலைகள் தானாகவே அங்கீகரிக்கப்படும். அதன்படி, பணம் பயனாளிகளின் கணக்கில் தாமதமின்றி வைபாக அனுப்பப்படும்.
மேலும் காசோலை பரிசீலனை நேரம் கடந்த காலங்களில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1980-களில், ஒரு காசோலையை பரிசீலிக்க முற்றிலும் ஒரு வாரம் எடுத்துவிடும். பின், அது மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல், அது ஒரு நாளாக குறைந்தது. தற்போது, அந்த பரிசீலனை 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.