சென்னை போரூரில் நடைபெற்ற வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் 4000 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
சென்னை போரூர் அருகே உள்ள தனியார் வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி வாரிய நலத்துறை அமைச்சர் முத்துசாமி, வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மேயர் பிரியா, மதுரவாயில் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், ராயபுரம் எம்எல்ஏ ஐரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4000 பொது மக்களுக்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “1600 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் அவசியம். வீட்டுடன் கூடிய இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது சவாலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பட்டா என்பது உங்களது கோரிக்கை அல்ல உங்களது உரிமை. மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். அமைச்சர் தலைமையில்
கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அதில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதுவரை 19 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அரசை தேடி மக்கள் வர வேண்டிய நிலை மாறி மக்களை தேடி அரசு வர வேண்டும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கி உள்ளார். 11 புள்ளி 19 சதவீத வளர்ச்சியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு துணையாக இந்த அரசு இருக்கும் அரசுக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.