ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார்.
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அமைச்சர், விடாமுயற்சி, தேசபக்தி, சிறந்தவற்றுக்காக பாடுபடும் இந்திய உணர்வு ஆகியவற்றின் அடையாளமாக நீரஜ் சோப்ரா திகழ்வதாக தெரிவித்தார். உயர்ந்த பண்புகளான ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தேசப்பெருமிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ள லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறைக்கும் அதே போல் ஆயுதப்படைகளுக்கும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பவராக பணியாற்றுகிறார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, இந்திய ராணுவம் மற்றும் பிராந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2016-ல் இந்திய ராணுவத்தில் இணைந்த லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் ராஜ்புதானா ரைபில்ஸ் படையில் பணியாற்றினார். அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தின் காந்த்ரா கிராமத்தில் 1997 டிசம்பர் 24 அன்று பிறந்த இவர், சர்வதேச விளையாட்டுகளில் தனது பாராட்டத்தக்க வெற்றிகள் மூலம், தேசத்திற்கும் ஆயுதப்படைகளுக்கும் பெருமிதம் சேர்த்துள்ளார். ஏற்கனவே இவர், பத்மஸ்ரீ, மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
