கீழடி!

Estimated read time 1 min read

Web team

r.jpg

‘கீழடி’ அகழாய்வு
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
வெளியீடு : பாண்டிய நாடு தொன்மைப் பாதுகாப்புச் சங்கம்,
104, ஆசிரியர் தெரு, சிலைமான், மதுரை – 625 201.
பக்கம் : நூற்கொடை : ரூ. 100

*****

‘கீழடி’ என்ற சொல் இன்று உலகம் அறிந்த சொல்லாகி விட்டது. தமிழரின் தொன்மை, தமிழின் தொன்மை உலகிற்கு பறைசாற்றிய அகழாய்வு பற்றிய வரலாற்றுப் பார்வையை நூலாக்கி உள்ளார். தன் பெயரிலேயே ‘கீழடி’யை இணைத்துக்கொண்ட கீழடி வை. பாலசுப்பிரமணியம் அவர்கள் கீழடி பற்றிய வரலாறு உலகிற்கு தெரிய முழுமுதற் காரணமாக இருந்தவர். தொல்லியல் துறைக்கு உதவியவர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி கீழடி பற்றிய உண்மை வெளிவர காரணமாக இருந்துள்ளார் நூலாசிரியர் பாராட்டுகள்.

மேனாள் தலைமையாசிரியர் பி.பழனியப்பன், மேனாள் துணை இயக்குநர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மா. சத்தியமூர்த்தி, முனைவர் வெ. வேதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளார்கள். திருவாளர்கள் மா. சத்தியமூர்த்தி, வெ. வேதாசலம் இருவரும் நான் பணிபுரிந்த திருமலை மன்னர் அரண்மனையில் பணிபுரிந்தவர்கள். இருவரையும் நன்கு அறிவேன். தொல்லியல் குறித்த புலமை மிக்கவர்கள். பொருத்தமானவர்களிடம் வாழ்த்துரை வாங்கியது சிறப்பு.

ஆய்வு நூலாக உள்ளது. பயன்பட்ட நூல்களின் பட்டியல்கள், கீழடி ஆய்வுக்கு நிலம் தந்த நல் உள்ளங்கள் பெயர் பட்டியல், 5ஆம் கட்ட ஆய்வு வரை பணிபுரிந்த தொல்லியல் அலுவலர்கள் அனைவரின் பெயர் பட்டியலும் நூலில் உள்ளது.

கீழடி பற்றிய நூல்கள் பல வரத் தொடங்கி விட்டன. ஆனால் இந்நூல் ஆய்வு நூலாக, கீழடி ஆய்வு எப்படி தொடங்கியது, யார் யார் நிலம் தந்து உதவினார்கள், ஆய்வில் பணிபுரிந்தவர்கள் என பல புள்ளிவிபரங்களுடன் வந்துள்ள நூலாக உள்ளது.

அகழாய்வு என்றால் என்ன? எப்படி தொடங்குகின்றனர்? இந்திய தொல்லியல் பரப்பியல் துறை A.S.I. என்பதன் விளக்கம், ஆய்வின் வகைகள் என விரிவாக விளக்கம் தந்துள்ளார். தொல்லியல் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

1954-55ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் ஆய்வு தொடங்கி 2017-2018 கொடுமணல் ஆய்வு வரை, வரிசையாக நடந்த தொல்லியல் ஆய்வுகளை பட்டியலிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வுகள் கொற்கை 1968-1969 தொடங்கி, கீழடி 2017, 2018, 2018-2019 வரை வருடங்களுடன் ஆய்வு நடந்த ஊர்களின் பட்டியல் உள்ளது.

நூலாசிரியரின் பல்லாண்டு உழைப்பு தேனீயைப் போல உழைத்து தேன் சேகரிப்பது போல சேகரித்து, அகழ்வாய்வின் வழிமுறைகள் நோக்கத்தை பயனை மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார், பாராட்டுகள்.

கீழடி எங்கு உள்ளது? மதுரையிலிருந்து காமராஜர் சாலை வழியே 12 கி.மீ, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 49, இராமேசுவரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. வைகையின் தென்கரையில் சுமார் 2 கி.மீ, தொலைவில் இந்தத் தொன்ம மேடு அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கொந்தகை பிர்காவிற்குள் இது அடங்கும். அருகிலுள்ள பிற ஊர்கள் மதுரை மாவட்ட சிலைமான் – கிழக்கே மணலூர் ஆகும்.

கீழடி எங்குள்ளது என்பதை மிகத் தெளிவாக எழுதிஉள்ளார்? நூலின் மூலம் படிக்கும் வாசகரை கீழடிக்கே அழைத்துச் சென்று காட்டி விடுகிறார். உலகப்புகழ்பெற்ற கீழடி 1974இல் மாணவர் சிலர் அவர்கள் வயலில் கிணறு வெட்டும்போது, பெரும் செங்கற்கள் கிடைப்பதாகச் சொன்னார்கள். கீழடி அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருந்த நூலாசிரியர் வை. பாலசுப்பிரமணியம் அவர்கள், மாணவர்கள் சொன்ன இடத்தில் சென்று பார்த்து சுட்ட செங்கல், கருப்பு சிவப்பு குவளை, சுட்ட மண்ணாலான மனிதத் தலை, ஒரு நாணயம், மண்டை ஓடு, கருப்புமணி ஆகியவற்றைக் கண்டெடுத்து பணியாற்றும் பள்ளியிலேயே காட்சிக்கூடம் அமைத்து காட்சிப்படுத்தி உள்ளார். தலைமையாசிரியரும் அனுமதி வழங்கி உள்ளார்.

தொல்லியல் ஆர்வம் காரணமாக திருமலை மன்னர் அரண்மனையில் நடந்த தொல்லியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பின்னர் கீழடி பற்றிய தகவல் தர் காப்பாட்சியர் வேதாசலம் அவர்கள் கீழடி வந்து பார்க்க, இப்படித்தான் தொடங்கியது கீழடி ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி. இனிய நண்பர் வேதாசலம் அவர்கள், கண்காணிப்பு தொல்லியலாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை நூலாசிரியரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்க 1974ல் தொன்மங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு 201-2014ல் சென்று காட்டி உள்ளார். இப்படி கீழடி ஆய்வு தொடங்கிய வரலாற்றை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர் கீழடி வை. பாலசுப்பிரமணியம்.

கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணங்களில் உள்ளன. சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், விளையாட்டு கருவிகள், இரும்பு ஆயுதங்கள், சங்கு வளையல் துண்டுகள், சிவப்பு வடிகட்டிகள், கருப்பு பாண்டம், சதுரங்கக் காய்கள், வேலைபாடுள்ள பானைகள், முக்குள்ள பானைகள், குழாய் இணைப்பு, பாண்டத்தில் காணப்பெறும் பெயர்கள், தொன்ம அணிகள், நாணயம், முத்திரைகள், தமிழ் பொறிக்கப்ப்ட்ட பானை ஓடுகள், குவளைகள், வட்டச்சில்லுகள், எலும்பினாலான அம்பு முறைகள், அஞ்சனக் கோல், தங்கத்தாலானவை, இரும்புப் பொருட்கள், காளை உருவம் அனைத்தும் புகைப்படங்களுடன் விளக்கங்களுடன் பட்டியலிட்டு எழுதி உள்ளார்.

கீழடியில் தமிழன், தமிழ் எழுத்தறிவோடு அறிவியல் அறிவோடு கட்டிட கலையோடு, தொழில்நுட்ப அறிவோடு அணிகலன்களோடு விளையாட்டு கருவிகளோடு போர்க்கருவிகளோடு பொற்கால வாழ்க்கை வாழ்ந்துள்ளான் என்பதையும்,உலகின் முதல் மொழி தமிழ் என்பதையும் இந்நூல் புலப்படுத்தி உள்ளது. பாராட்டுகள்.
இந்த நூலை மதிப்புரைக்காக என்னிடம் வழங்கிய இனிய நண்பர் சுழற்ச்சங்கம் நாகராசன் அவர்களுக்கு நன்றி.

Please follow and like us:

You May Also Like

More From Author