இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பர் மானுவல் பிரடெரிக், தனது 78வது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் காலமானார்.
1972ஆம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வெல்ல இவர் முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வென்ற கேரளாவின் முதல் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார். விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு 2019ஆம் ஆண்டில் தியான் சந்த் விருது வழங்கப்பட்டது.

பிரடெரிக்கின் வழியைப் பின்பற்றி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்ற பி.ஆர். ஸ்ரீஜேஷ், தனது கேரள முன்னோடிக்குச் சமூக ஊடகப் பதிவு மூலம் அஞ்சலி செலுத்தினார். “கோல்கீப்பிங்கில் உயர்ந்து நின்ற மனிதர் இப்போது ஜாம்பவான்களுக்கு மத்தியில் இருக்கிறார். தலைமுறைகளை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. ஜாம்பவான், சாந்தியடையுங்கள்” என்று ஸ்ரீஜேஷ் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                