தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, நவ., 11ல் இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
தெலுங்கானா காங்., செயல் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், 62, மாநில மேல் சபை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தெலுங்கானா அமைச்சரவையில் அவர் இன்று சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அசாருதீனை, அமைச்சரவையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ., புகார் மனு அளித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெலங்கானா அமைச்சராக இன்று (அக்.31) பதவியேற்றுக்கொண்டார். 2023 சட்டப்பேரவை தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி அசாருதீனுக்கு வழங்கப்பட்டது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                