திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு.
அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமிகளில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன் தரக் கூடியதாகும். ஐப்பசி பெளர்ணமி எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை பெளர்ணமியில் தான் ஜோதி வடிவமாக சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சி அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல் கிரிவல வழிபாடு தோன்றியது, பார்வதிக்கு தனது உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக ஈசன் காட்சி அளித்து ஆகியவையும் இதே கார்த்திகை பெளர்ணமியில் தான் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த (கார்த்திகை) மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 3:55 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
