தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணும் நிலையில் அவரது கட்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் அதனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் இணைந்தார். இன்னும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் திமுக இரண்டு சிட்டிங் அமைச்சர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் கூறியிருந்தார்.
நடிகர் விஜய் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை தொடர்ந்து விமர்சிக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் அவர் நெருக்கம் காட்டுவதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ராகுல் காந்தி கூறியதன் பெயரில் தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாக ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜயை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை மறுத்திருந்தார். ஆனால் பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜயை சந்தித்து பேசியது உண்மைதான் எனவும் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தற்போதைக்கு அது பற்றி விரிவாக சொல்ல முடியாது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் சீட்டு மறுக்கப்பட்டதால் தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் தேர்தல் சமயத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
