இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடந்தது. ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை நின்று போனது.
இந்த நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக இந்தியா வந்த ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. பின்னர், இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனையடுத்து பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய பிரதமர் மோடி, சிக்கலான உலகளாவிய சூழலில், பகிரப்பட்ட வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை உலக வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கிய இணைப்பாக மாற்ற இரு தரப்பும் உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், குடியரசு தின விழாவுக்கு தன்னை அழைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா, இந்தியா வெற்றியடையும் போது, உலக நாடுகள் பாதுகாக்கப்படும் எனவும், நிச்சயத்தன்மையற்ற உலகில் நமது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்
